இரண்டாவது மொழியாக ஒரு பொது மொழி வேண்டும் என்றே கூறினேன்! அமித் ஷா அதிரடி பேச்சு!

19 September 2019 அரசியல்
amithshahlatest.jpg

யப்பா சாமி! முடியலப்பா இந்த அக்கப்போர் என, நீங்கள் நினைக்கலாம். அந்த அளவிற்கு இந்த ஹிந்தித் திணிப்பு குறித்து அதிகளவில் நாம் கடந்த சில நாட்களாக பேசி வருகின்றோம். இதற்கு விதை விதைத்தவர் பாஜக பெரும் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா. அவர் டிவீட் செய்தது மட்டுமின்றி, மேடையிலும் பேசினார். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், அனைத்து நாடுகளுக்கும் பொதுவான மொழி உள்ளது. அவர்களால் எளிதாக அடையாளப்படுத்த முடிகிறது. இந்தியாவின் மொழி என்ன என்று கேட்டால், நமக்குக் கூறுவதற்கு மொழி இல்லை. எனவே, ஹிந்தி மொழியை நாம் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என, பேசினார்.

அவ்வளவு தான், தமிழகத்தில் இருந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின், கே எஸ் அழகிரி, அதிமுக கட்சியினர், வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும், இதனை எதிர்த்துப் பேச ஆரம்பித்துவிட்டனர். சரி, தமிழகத்தில் மட்டும் தான் இப்படி என்றால், கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா என, ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் ஹிந்தி திணிப்பு எனக் கூறி, அமித் ஷாவின் பேச்சை எதிர்த்தது.

இதற்கெல்லாம் மணிமகுடமாக, அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறி வரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிந்தியை மட்டுமல்ல, எந்த மொழியையும் திணித்தால் தென்னிந்தியா மட்டுமல்ல, வட இந்தியாவின் பல மாநிலங்களும் எதிர்க்கும் எனப் பேசிவிட்டார். அவர் பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என பலரும் பேசி வருகின்றனர். அவரும், அவ்வாறு தான், மோடியையும், அமித் ஷாவையும், அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணன் என்று புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நானும், ஹிந்தியினை தாய்மொழியாக கொள்ளாத குஜராத் மாநிலத்தில் இருந்து தான், வந்துள்ளேன். தாய் மொழியினை விடுத்து, ஹிந்தியினை திணிப்பது பற்றிக் கூறவில்லை. தாய் மொழிக்கு அடுத்து, இரண்டாவது மொழியாக ஹிந்தியினை பரிந்துரைத்தேன் எனக் கூறினார்.

இதனிடையே, வரும் 20ம் தேதி, திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, விடுத்திருந்த அறிவிப்பினை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளது. இன்று மாலை தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தப் பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முக ஸ்டாலின், ஆளுநர் உறுதியளித்ததை அடுத்து, திமுக நடத்தவிருந்தப் போராட்டம், தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

HOT NEWS