ஆந்திர பிரதேச மாநிலத்தில், கோதண்ட ராமர் கோயிலில் இருந்து ராமரின் சிலையானது உடைக்கப்பட்ட விவகாரம், தற்பொழுது பெரிய அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமதீர்த்தம். இந்தக் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த சிலையானது, திடீரென்றுக் காணாமல் போனது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது, அந்த ராமர் சிலையானது உடைக்கப்பட்டு, அருகில் இருந்த குளத்தில் வீசப்பட்டு இருந்தது.
அதனைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆந்திராவில் கடந்த மாதம் தொடங்கி இந்த மாதிரியான விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ஜெகன்மோகன் அரசானது பெரிய அளவில் இதில் அக்கறைக் காட்டவே இல்லை. இந்த சூழலில், இந்த கோயிலைப் பார்வையிடுவதற்காக தான் செல்ல உள்ளேன் என, சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக, ஆளுங்கட்சியின் எம்பியான விஜய்சாய் ரெட்டி அக்கோயிலுக்கு செல்ல முயன்றார். ஆனால், அப்பகுதி மக்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இத்தனை நாட்களாக வராத நீங்கள் இப்பொழுது எதற்காக வந்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் இதற்காக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்பியும் அந்தக் கோயிலினை பார்த்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.
இதனிடையே, சந்திரபாபு நாயுடு அந்தக் கோயினைப் பார்வையிட்டு உள்ளார். அவரைத் தொடர்ந்து பலக் கட்சித் தலைவர்களும், இந்தக் கோயிலைச் சென்று பார்வையிட்டனர். இது தற்பொழுது ஆந்திரா அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.