அடுத்த செமஸ்டர் தேர்வுகளும், ஆன்லைனிலேயே நடைபெறும் என, அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.
தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இருப்பினும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, பலத் தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், அடுத்த செமஸ்டருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வருகின்ற நவம்பர் 16ம் தேதி முதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன், பல்வேறு விதிகளையும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வருகின்ற வாரங்களில் அடுத்த செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில், அடுத்த செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என, அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது. கடந்த செமஸ்டரினையும், ஆன்லைனில் நடத்தியது அண்ணா பல்கலைக் கழகம். இறுதி செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ஆன்லைனில் நடத்திய நிலையில், அடுத்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைனில் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு தற்பொழுது, பல்வேறு தரப்பட்டக் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.