தற்பொழுது நடைபெறாமல் உள்ள பல்கலைக் கழகத் தேர்வுகளானது, வருகின்ற 22ம் தேதி நடைபெறும் என, அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பல்கலைக் கழகத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. இதனையடுத்து, தற்பொழுது யூஜிசி அமைப்பானது புதிய சுற்றறிக்கையினை வெளியிட்டது. அதில், வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்வுகளை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே, இது குறித்து தற்பொழுது சென்னை அண்ணா பல்கலைக் கழகம் புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில், வருகின்ற 22ம் தேதி தொடங்கி, இணைய வழியில் தேர்வுகள் நடைபெறும் என்றுக் கூறியுள்ளது. இந்தத் தேர்வினை, செல்போன், டேப்லட், லேப்டாப், கம்ப்யூட்டர் மூலம் எழுத இயலும் என்றுக் கூறியுள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் 29ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறியுள்ளது.
இந்தத் தேர்வில் OBJECTIVE TYPE முறையில் கேள்விகள் கேட்கப்படும் எனவும், மாணவர்கள் அதற்குத் தயாராகும் படியும் கூறியுள்ளது. தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மாதிரித் தேர்வு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளது. அதே போல், தேர்வு சமயத்தில் மாணவர்கள், தலையினை வேறு எங்கும் திருப்பக் கூடாது எனவும், ஒரு முறை மட்டும் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதனை மீறினால், நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.
அதனையும் மீறித் தொடர்ந்து, தலையினைத் திருப்பினால் தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும், இதற்காகப் பிரத்யேக ஏஐ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த உள்ளதாகவும் அது தெரிவித்து உள்ளது. ஒருவர் இணைய வழியில் தேர்வு எழுதுகின்றார் என்றால், திடீரென்று நம் ஊர்களில் பவர் கட் ஏற்படுகின்றது. ஒருவேளை தேர்வு எழுகின்ற சமயத்தில் பவர் கட் ஆனால், மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுதி முடிப்பர் என்பது கேள்விக்குறிய விஷயம் தான்.