15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என இங்கு வலியுறுத்தப்படுகிறது. இப்படத்தில் வரும் திகில் தரும் இசையின் காரணமாக, இதய பலகீனமானவர்களும் பார்க்க வேண்டாம்.
என்னடா, கொஞ்ச நாளா ஒரு ஹாலிவுட் பேய் படத்தையுமே காணோம்னு, கவலைப்பட்டவங்களுக்காகவே சுடச்சுட, வெளியாகியிருக்கு அனபெல். காஞ்சூரிங் பட வரிசையில் 7வது பாகமாகவும், அனபெல் திரைப்பட வரிசையில் 3வது பாகமாகவும், வெளியாகி உள்ள இத்திரைப்படத்திற்கு, தற்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தின் கதைக்குப் போவதற்கு முன், ஒரு சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம். காஞ்சூரிங் திரைப்படத்தைப் பற்றி, நம் அனைவருக்குமே தெரியும். இப்படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான். அவர் உருவாக்கிய பாதையில், பல இயக்குநர்களும் தற்பொழுது ஹாரர் திரைப்படங்களை, எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், ஐடி, தி நுன் படங்களின் திரைக்கதை ஆசிரியரான கேரி டாபர்மேன், இந்த அனபெல் கம்ஸ் ஹோம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
காஞ்சூரிங் படத்தில் இருந்து, தொடர்ந்து ஒரு சிலக் கதாப்பாத்திரங்கள் இந்தப் படம் வரையிலும் வந்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயமாகும். எட், லாரன், அவர்களுடைய மகள் ஜூடி ஆகியோர், இப்படத்திலும் உள்ளனர். சரி இப்படத்தின் கதையைப் பார்ப்போம்.
மிக மோசமான பேய் பொம்மை இந்த அனபெல். அதனை ஒரு கேஷை பார்க்கும் பொழுது, எட் மற்றும் லாரன் கண்டுபிடிக்கின்றனர். அவர்கள், இந்த பொம்மையை எடுத்து, அவர்களுடைய பாதுகாப்பு அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். அவ்வாறு பூட்டிய அறையில், பலவிதமான அமானுஷ்ய பொருட்களும், பேய்கள் இருக்கும் பொம்மைகளும் உள்ளன. இவர்கள் வழக்கம் போல், தங்களுடைய வேலைகளை சென்று கவனிக்கின்றனர்.
அவ்வாறு செல்லும் அவர்கள், தங்களுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ள மேரி எலன் என்ற பெண்ணை வேலைக்கு வைக்கின்றனர். ஒரு நாள் மேரி எலனின் தோழி டெனிலா, மேரியைக் காண, அந்த வீட்டிற்கு வருகிறார். தன்னுடைய சொந்த தேவைக்காக, அந்த பாதுகாப்பு அறைக்குள் செல்கிறாள்.
திடீரென்று நடக்கும் சம்பவங்களால், அனபெல் பொம்மை வெளியே வந்துவிடுகிறது. அவ்வளவு தான். அடுத்த என்ன நடக்கும் என, நீங்களே யூகித்து இருப்பீர்கள். இந்த பொம்மை சும்மா இல்லாமல், துணைக்கு சில பேய்களையும் விடுவிக்கிறது. இவைகளிலிருந்து எட் மற்றும் லாரன் குடும்பத்தினர், எவ்வாறு தப்பிக்கின்றனர். அனபெல்லுக்கு என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை.
சும்மா சொல்லக் கூடாதுப்பா! படம் முழுக்க இருட்டுக்குள்ளயே எடுத்திருக்குறதுனால, நமக்கு எதுவும் தெரியமாட்டேங்குது. வர்றது பேயா இல்லை மனிதனா என, பின்னணியில் கொடுக்கப்பட்டுள்ள இசையை வைத்து மட்டுமே யூகிக்க முடிகிறது. முதல் பாதியில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
அந்த அளவிற்கு இப்படத்தின் இயக்குநர் கேரி, செதுக்கி இருக்கிறார். பெரிய அளவில் எதிர்ப்பார்க்காமல் சென்றால், இப்படம் உங்களை ரசிக்க வைக்கும். படத்தின் பின்னணி இசை மட்டுமல்ல, திகில் ஏற்படுத்தும் அந்த சவுண்ட் எஃபெக்ட்டுகளுமே அருமை தான்! என்ன படத்தில் கொஞ்சம் வெளிச்சம் சேர்த்திருக்கலாம். குழந்தைகளைப் பயமுறுத்த நினைத்தாரோ என்னமோ, படத்தை இருட்டிலேயே எடுத்துள்ளார்.