இதுவரை நடந்து முடிந்துள்ள பொறியியல் கல்லூரி கலந்தாய்வில் வெறும் 50,000க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. இது அண்ணா பல்கலைக்கழக வரலாற்றிலேயே, மிக மோசமானதாக கருதப்படுகிறது.
இதுவரை நடந்து முடிந்த பொறியியல் கலந்தாய்வில், வெறும் மூன்று கல்லூரிகளில் மட்டுமே, நூறு சதவீத இடங்கள் நிரம்பியுள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
மேலும், எட்டு கல்லூரிகளில் மட்டுமே 99 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன. வெறும் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை 115க்கும் மேல் என கூறுகின்றனர். ஒன்று முதல் ஒன்பது மாணவர்கள் வரை, நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை 80க்கும் மேல். தற்பொழுது வரை 35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படவில்லையாம்.
இத்தகையத் தகவலை தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியாகி உள்ளது. இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகள் காத்து வாங்குகின்றன. தரமற்ற கட்டமைப்பு, வேலைவாய்ப்பின்மை, அதிக கட்டணத்தின் காரணமாக, பொறியியல் படிப்பின் மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்துவிட்டதென்பது தான் நிதர்சமான உண்மை. மூன்று சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், வெறும் 44,000 இடங்களே கலந்தாய்வில் காலியாகி உள்ளன. இதனால், நான்காம் சுற்றுக்கு கலந்தாய்வு செல்லும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரிகளில் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பொறியியல் படிப்பினைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.