ரிப்பப்ளிக் டிவி உரிமையாளரும், பிரபல செய்தி தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமி மற்றும் 2 பேருக்கு, 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அன்வாய் நாயக் மற்றும் அவருடைய தாய் குமாத் நாயக் ஆகியோர், தங்களுடைய வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதி விட்டு வைத்திருந்தக் கடிதத்தில் நாங்கள் ரிபப்பிளிக் டிவிக்காக இன்ட்டீரியர் டெகோரேஷன் செய்து தந்திருந்தோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டிய 5.40 கோடி பாக்கியினைத் தர மறுத்து ஏமாற்றி வருகின்றனர். எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை.
இதனால், நாங்கள் வேறு வழியின்றி தற்கொலைச் செய்து கொள்கின்றோம். எங்கள் தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெர்ரோஸ் ஷேக் மற்றும் நிதிஷ் சார்தா ஆகியோர் தான் காரணம் என, எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்தக் கடிதத்தினைக் கைப்பற்றியப் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்குச் சென்ற அலிபார்க் போலீஸார், அங்கிருந்து அர்னாப் கோஸ்வாமியினை தரத்தரவென இழுத்துச் சென்றனர்.
அவரை நேற்று மாலையில், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அர்னாப் கோஸ்வாமிக்காக மூத்த வழக்கறிஞர் அபத் போன்டா வாதாடினார். அந்த வழக்கின் எப்ஐஆரினை படித்த நீதிபதி, அர்னாப் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய பெர்ரோஸ் ஷேக் மற்றும் நிதிஷ் சார்தா உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலினை விதித்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள, தற்கொலை செய்து கொண்டவரின் மகள், 2018ம் ஆண்டு என்னால் மறக்க முடியாத ஒன்றாகும். இந்த சட்ட நடவடிக்கையானது, மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும் என்றுக் கூறியுள்ளார்.