அரியர் தேர்வு வழக்கு! தள்ளி வைப்பு! மாணவர்கள் குழப்பம்!

11 January 2021 அரசியல்
annauniversity1.jpg

தமிழகத்தில் அரியர் தேர்வு வழக்கானது, தற்பொழுது பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளில் பலவும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கின் காரணமாக, தேர்வுகளை ரத்து செய்வதாகவும், பணம் செலுத்திய மாணவர்கள் பாஸ் எனவும், அரியர் தேர்வுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல ஆயிரம் மாணவர்கள், இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள், பிளக்ஸ்கள், பேனர்களை அடித்து கொண்டாடினர்.

இந்த சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதனால், அரியர் ரத்து விவகாரம் நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் காரணமாக, அரியர் ரத்து அறிவிப்பானது தற்பொழுது வரை, நடைமுறைக்கு வரவில்லை. இதனால், படித்துவிட்டு பட்டப்படிப்புச் சான்றிதழுக்காக காத்திருக்கின்ற மாணவர்கள் முதல், வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் மாணவர்கள் வரை, பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்த, அண்ணா பல்கலைக் கழகம் தன்னுடைய வலைப்பக்கத்தில் அனுமதி அளித்தது. இது மாணவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தியது. இருப்பினும், தேர்வையாவது எழுத விடுங்கள் என்ற நிலைக்கு அவர்களும் வந்துவிட்டனர். இந்த சூழலில், கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவுகின்றது எனக் கூறி, டிசம்பர் மாதம் நடைபெற வேண்டியத் தேர்வுகளையும் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதனால், மாணவர்களின் படிப்பானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், அரியர் ரத்து குறித்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் முன்னிலையில், இந்த ரத்து விவகாரம் சட்டத்திற்கு புரம்பானது எனவும், இதனை அனுமதிக்க இயலாது எனவும் ஏஐசிடிஇ அமைப்பும் யூஜிசியும் கூறியுள்ளன. இதனால், இந்த வழக்கானது அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

HOT NEWS