அசுரன் திரைவிமர்சனம்!

04 October 2019 சினிமா
asuranreview.jpg

ரேட்டிங்:4.4/5

சுமார் 2 மணி 20 நிமிடம் ஓடும் படமாக, அசுரன் திரைப்படம் உருவாகி உள்ளது. படம் வெளியான இன்று, அனைத்துத் திரையறங்குகளிலும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

தனுஷ், கருணாசின் மகன் கென், மஞ்சு வாரியர், பவன், டேனியல் பாலாஜி, பிராகாஷ் ராஜ் உட்பட பல திரைப் பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். அவைகளையெல்லாம் மீறி, தனுஷ், வெற்றி மாறன் இணையும் நான்காவது வெற்றித் திரைப்படம் இது ஆகும்.

இதற்கு முன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் மூலம், ஒரு உயரத்திற்குச் சென்ற இந்தக் கூட்டணி, தற்பொழுது அடுத்த கட்டத்திற்கு அசுர வளர்ச்சியடைந்து, அசுரனாக வளர்ந்து நிற்கின்றது.

இப்படம், 1980 மற்றும் 1960களில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டது ஆகும். தனுஷின் குடும்பத்திற்கும், மற்றொரு கிராமத்தில் இருக்கும் நரேனின் குடும்பத்திற்கும் நிலத் தகராறு நிலவி வருகிறது. அதில் தனுஷின் மகனை நரேன் ஆட்களை வைத்துக் கொன்று விடுகிறார். இதனால், சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ் எடுக்கும் அவதாரம் தான் அசுரன்.

படிப்பதற்கு மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கும். ஆனால், அவர்கள் அதனைப் படமாக எடுத்திருக்கும் விதம் இருக்கே, அப்ப்பப்பபா!! கண்டிப்பாக, இப்படத்திற்காக ஒரு தேசிய விருது கிடைக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. படத்திற்கு, பின்னணி இசையினை, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படம் முழுக்க, அவருடைய திருவிளையாடல் அருமையாக உள்ளது. ஆடுகளம் படத்தினை நாம் ரசித்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தது அந்தப் பின்னணி இசை தான். அதனை மிகத் தெளிவாகவும், சிறப்பாகவும் தந்து அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளார்.

நடிகர் தனுஷினைப் பற்றியும், மஞ்சு வாரியாரைப் பற்றியும் பேச வேண்டும். மஞ்சு வாரியர், பச்சையம்மாள் என்ற கதாப்பாத்திரத்தில் தன்னுடைய மொத்த வித்தையையும் காட்டு காட்டு என காட்டியுள்ளார். தனுஷ் சிவசாமி என்ற கதாப்பாத்திரத்தில், அசுரத்தனமாக நடித்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. இப்படத்தில் நடித்ததற்காக, கண்டிப்பாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை அவர் பெறுவார் எனக் கூறலாம். மொத்தத்தில் அசுரன் திரைப்படம் அசுரத்தனம்.

HOT NEWS