உலகளவில் இரண்டாவது பாக்ஸ் ஆபிஸ் திரைப்படமாக உள்ள, அவதார் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இந்தப் படம் பல சாதனைகளையும், விருதுகளையும் அசால்ட்டாக வாரிக் குவித்தது. இந்தத் திரைப்படம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதனைப் புரிந்தது. இந்த சாதனையை 2019ம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படம் முறியடித்து நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியது.
இந்த சூழ்நிலையில், அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்து வருகின்றனர். இந்தப் படம் குறித்த அறிவிப்பானது, தற்பொழுது வெளியாகி உள்ளது. அவதார் படத்தின் இரண்டாவது பாகமானது, டிசம்பர் 17ம் தேதி 2021ம் ஆண்டும், மூன்றாவது பாகமானது டிசம்பர் 22 2023ம் ஆண்டும், நான்காவது பாகமானது டிசம்பர் 19, 2025ம் ஆண்டும் கடைசி பாகமானது 17 டிசம்பர் 2027ம் ஆண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2014ம் ஆண்டே அடுத்த பாகம் வெளியாக வேண்டியதாக இருந்த நிலையில், இரண்டாவது பாகத்தின் பெரும்பாலான காட்சிகள், கடலுக்கடியில் எடுக்கப்பட வேண்டி இருப்பதாகவும், இதுவரை உலகில் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், 3டி கண்ணாடி அணியாமலேயே இந்தப் படத்தினை 3டியில் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் படத்தின் சூட்டிங்கானது, 2017ம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது.