இராமர் கோவில் கட்ட அனுமதி! பாபர் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்! அயோத்தி வழக்கில் தீர்ப்பு!

09 November 2019 அரசியல்
supremecourt.jpg

நீண்ட சர்ச்சைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் பதற்றத்திற்கு இடையில், இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்தது.

கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வந்த, அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் வழக்கில், அலகாபாத் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மூன்று நபருக்கும் இடத்தினைப் பகிர்ந்தளிக்க தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, மூன்று குழுவுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்டு குழு முழுமையாக விசாரித்தது.

ஆரம்பம் முதல் முடிவு வரை விசாரித்த நீதிபதிகள், ஆதாரங்களை ஆய்வு செய்தனர். அதில், தொல்லியல் துறையின் அறிக்கையும் சேர்க்கப்பட்டது. வரும் 17ம் தேதியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற இருப்பதால், அதற்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் நேற்று இரவு உச்சநீதிமன்றம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன்படி, இன்று (09-11-2019) காலை 10.30 அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என இருந்தது.

இதனையடுத்து, தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அயோத்தி அமைந்துள்ள, உத்திரப்பிரதேசத்தில் 5,000க்கும் மேற்பட்ட துணை இராணுவப் பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டு வந்த மூன்றடுக்குப் பாதுகாப்பிற்குப் பதில், இன்று ஐந்தடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அமைந்துள்ளப் பகுதியில், 144 தடை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகு, இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பினை 10.30 மணிக்கு வழங்கினர். அதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்தார். அதில் உள்ள சிறப்பம்சங்களை பின்வருமாறு காணலாம்.

சியா பிரிவினர் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல், அந்த நிலத்திற்கு உரிமை கோரியா நிர்மோகி அகோராவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ராம்லல்லா மற்றும் சன்னி பிரிவினர் மட்டுமே, இந்த வழக்கில் நீடித்தனர்.

இதனையடுத்து, தொல்லியல் துறையின் அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தின் அடிப்பகுதியானது, இஸ்லாமிய முறைப்படி இல்லை. அதே சமயம், அங்கு ஏற்கனவே வேறொரு கட்டிடம் இருந்துள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அங்கு கோவில்கள் இருந்ததாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. மேலும், அங்குள்ள இடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்பதற்கான, எவ்வித ஆதாரத்தையும் சன்னி பிரிவினர் சமர்பிக்கவில்லை. மேலும், இடமானது அரசுக்கு சொந்தமாகும். ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கையானது, தலையிட முடியாது.

அயோத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதனை இந்துக்கள் நம்புகின்றனர். சன்னிப் பிரிவினருக்கு 5 ஏக்கர் நிலத்தினை அரசு, அவர்களுக்கு ஏற்ற வகையில் தர வேண்டும். அயோத்தியில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் குழு அமைக்கப்பட்டு, இராமர் கோவில் கட்டும் பணியினை உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமானது கோவில் கட்ட ஒதுக்கப்பட்டு உள்ளது என, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்தார். இதனையடுத்து, சன்னி பிரிவின் வழக்கறிஞர் தீர்ப்பின் நகல் முழுமையாக கிடைத்ததும், ஆய்வு செய்து அடுத்த என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

HOT NEWS