பெங்களூரில் திடீரென்று கேட்ட “டமால்” சப்தம்! இது தான் காரணமாம்!

21 May 2020 அரசியல்
militaryjet.jpg

கர்நாடகாவின் பெங்களூரு நகரில், நேற்று திடீரென்று பயங்கரமான சப்தம் கேட்டதால், பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே-31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் ஒலி மாசின் அளவானது மிகக் குறைந்த அளவிற்குச் சென்றுள்ளது.

இதனிடையே, நேற்று மதியம் 1.30 மணியளவில், பெங்களூரு பகுதியில் பயங்கரமான சப்தம் கேட்டது. இந்த சப்தத்தினை, பெங்களூரு நகரின் ஹெச்ஏஎல், பிடிஎம், ஒயிட்பீல்ட், கோரமங்கலம், ஓல்ட் மெட்ராஸ் ரோடு, உல்சூர், குண்டனஹல்லி, காமன்னஹல்லி, சிவிராமன் நகர் உள்ளிட்டப் பலப் பகுதிகளில் இந்த ஒலியானது கேட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் கடுமையாக அச்சம் அடைந்தனர். ஏதோ வெடித்துள்ளது எனவும், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் பெங்களூரு வாசிகள், சமூக வலைதளங்களில் தங்களுடையக் கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். இது குறித்து பேசிய அந்நகர காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ், இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடகாவின் பேரிடர் மேலாண்மை வாரிய இயக்குநர் இது குறித்துப் பேசுகையில், இந்த ஒலியானது நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்பட்டு இருந்தால், கண்டிப்பாக நில அதிர்வுகள் ஏற்பட்டு இருக்கும். ஆனால், அப்படி எதுவும் தற்பொழுது வரை பதிவாகவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த சப்தத்தால் பொதுமக்கள் கடும் குழப்பம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில், இந்திய விமானப்படை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. சோனிக் பூம் எனப்படும் அதிவேக செயல்திறன் கொண்ட விமானம் பறந்த காரணத்தினால் தான், இப்படிப்பட சப்தம் எழுந்ததாகவும், ஊரடங்கின் காரணமாக ஊரே அமைதியாக உள்ளதால், இந்த சப்தம் பெரிதாக கேட்டுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளது. இது வழக்கமான நிகழ்வு எனவும் கூறியுள்ளது.

HOT NEWS