ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நடிகர் விஜய், யோகி பாபு, ஆனந்த் ராஜ், கதிர், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில்.
இத்திரைப்படத்திற்கு, இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து இருக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் இணையத்தில், ஹிட்டான நிலையில் படத்தின் ட்ரெய்லரும் பல சாதனைகளைப் புரிந்துள்ளது.
இதனிடையே, இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என, படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து, இப்படத்தின் டிக்கெட் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் டிக்கெட்டுகள் தற்பொழுது இணையத்திலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. சாதாரணமாக, 100 முதல் 150 ரூபாய்க்குள் டிக்கெட்டுகள் இணையத்தில் விற்கப்பட்டால், பிகில் படத்தின் டிக்கெட்டுகள் 180 முதல் 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
இது இப்படி என்றால், தியேட்டரில் இருந்து, பல்காக டிக்கெட் வாங்கும் ரசிகர் மன்றத்தினர் அதனை 800 ரூபாய் வரையிலும் விற்கின்றனர். இதனால், சாமானிய மனிதனால் இப்படத்தினை பார்க்க இயலாது. மேலும், அரசாங்கம் விதித்துள்ள டிக்கெட் விலையினை மீறி இப்படத்தின் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக, ரசிகர்கள் குமுறுகின்றனர்.