பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணியானது, அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது.
பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலானது நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்கும். அங்கு ஆளும் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியும் பாஜகவும் இணைந்து தேர்தலை சந்தித்தன. அதே போல், லாலு பிரசாத் கட்சியான ஆர்ஜேடியும், காங்கிரஸூம் இணைந்து மகாகத்பந்தன் என்றக் கூட்டணியினை உருவாக்கியது. இரண்டு கூட்டணிகளுடன், ராம்விலாஸ் பாஸவானின் எல்ஜேபி கட்சியும் போட்டியிட்டது. தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணியே ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 10ம் தேதி அன்று வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த வாக்கு எண்ணும் பணியானது, நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் தொடங்கி, இரண்டு கூட்டணிகளுக்கும் இடையில் கடுமையானப் போட்டி நிலவியது. யார் அதிகப் பெரும்பான்மை பெறுவார் என்ற அனைவரும் குழம்பும் வகையில், ஒருவரை ஒருவர் முந்தி வந்தனர். இந்த சூழலில், பாஜக கூட்டணியானது 125 இடங்களையும், மகாகட்பந்தன் 110 இடங்களிலும் வென்றுள்ளது. இதைத் தவிர்த்து ஏஐஎம்ஐஎம் 5 தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி 1 இடத்திலும், பிஎஸ்பி மற்றும் சுயேட்சை தலா ஒரு இடத்திலும் வெனுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 74 இடங்களிலும், ஜேடியு 43 இடங்களிலும், விஐபி 4 இடங்களிலும், ஹெச்ஏஎம் 4 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். அதே போல், மகாகட்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி 75 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் இடதுசாரிகள் மொத்தமாக 16 இடங்களிலும் வென்றுள்ளனர். அதிகளவில் இடங்களை வென்றுள்ள பாஜக, தற்பொழுது பீகாரில் ஆட்சி அமைக்கும் எனவும், நிதிஷ் குமாரின் கட்சி அதற்கு ஆதரவு அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.