பீகாரில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ள மகா கூட்டணியானது, ஆட்சியினைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கூட்டணியில் ஜக்கிய ஜனதா தளக் கூட்டணியும், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்டப் பலக் கட்சிகள் இணைந்த மகா கூட்டணியும் நேராக மோதின. அந்த மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையிலும், பொதுமக்கள் ஊரடங்குக் காலத்தில், அமைதியாக சமூக இடைவெளியினைப் பின்பற்றி வாக்கு அளித்தனர். இந்த தேர்தலில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. இதனை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பானது, இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்புகள் தற்பொழுது வெளியாகி உள்ளன.
அதில், மோடி மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியானது, 100 முதல் 120 இடங்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியானது 120 முதல் 140 இடங்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ரிபப்ளிக் டிவி, ஏபிபி, ஜான் கீ பாத், டைம்ஸ் நவ், சி ஓட்டர்ஸ், டிவி 9 உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு உள்ளன.
அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே, ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியே வெல்லும் என்றுக் கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியின் உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தேர்தலில் மகா கூட்டணி வெல்லும் பட்சத்தில், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், முதல்வராவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.