ஐந்து மாதங்களுக்குப் பிறகு துவங்கியது பேருந்து சேவை! மக்கள் அலைமோதல்!

07 September 2020 அரசியல்
tnstc.jpg

கடந்த மார்ச் 25ம் தேதி அன்று முடங்கிய போக்குவரத்து சேவையானது, 166 நாட்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், கடந்த மார்ச் 25ம் தேதி அன்று, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக, தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தானது தடை செய்யப்பட்டது. இதனால், உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தற்பொழுது ஊரடங்கில் பலத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவர்களுக்காக, செப்டம்பர் ஏழாம் தேதி முதல், பேருந்து போக்குவரத்தானது அனுமதிக்கப்படுவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தற்பொழுது பேருந்து போக்குவரத்தானது, அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், காலையிலேயே பொதுமக்கள் பேருந்து நிலையங்களில், திரண்டனர். சொந்த ஊர்களுக்குச் செல்லவும், வேலைகளுக்குச் செல்லவும் பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் குவிந்ததால், இயல்பு வாழ்க்கைத் திரும்பியது போல தமிழகம் காட்சியளிக்கின்றது. பல இடங்களில், சமூக இடைவெளியானது கடைபிடிக்கப்பட்டாலும், ஒரு சில இடங்களில் சமூக இடைவெளியானது கடைபிடிக்கப்படவில்லை.

பேருந்தின் அளவானது, முந்தைய அளவினை விட, மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றது. தற்பொழுது சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, வெறும் 400 பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பேருந்தில் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

HOT NEWS