வருகின்ற மே-3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, நீட்டிக்கப்படுகின்றது என, பிரதமர் மோடி ஏப்ரல்14ம் தேதி அன்று அறிவித்தார். மேலும், இந்த ஊரடங்கில் ஒரு சில விதிவிலக்குகளும் மத்திய அரசால், அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அவர் கூறியபடி, இன்று (ஏப்ரல் 15) புதிய விதிவிலக்குகள் மற்றும் விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி முதல் பல விஷயங்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு உள்ளன. மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பால் உற்பத்தி மற்றும் விற்பனையை தொடர்ந்து செய்யலாம். விவசாயக் கொள்முதல் செய்யும் நிலையங்கள், செயல்படுவதற்கு இருந்து வந்த தடைகள் நீக்கப்பட்டு உள்ளன.
தேயிலை, ரப்பர், காபி உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டவர்கள் 50% பேர் பணிக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுரையைப் பின்பற்றி, குறிப்பிட்ட பகுதிகளில் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடையில்லை. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் தடை செய்யப்பட்டு உள்ளன. விமனா சேவை, உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளின் பணமானது, திரும்பி வழங்கப்பட உள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் இயங்கத் தடை நீக்கப்படுகின்றது. இதனால், அந்த நிறுவனங்கள் செயல்படலாம். ஊரகப் பகுதிகளில் உள்ள உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இயங்க அனுமதி. சிறு குறு கட்டிட வேலைகள் நடக்கவும் அனுமதி. லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்புகள் இயங்க அனுமதி. வணிக வளாகங்கள், திரையறங்குகள் உள்ளிட்டவைகளுக்குத் தடை தொடரும்.
நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள், சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து பேருக்கு மேல், பொது இடங்களில் நடமாடக் கூடாது. மீறினால், அபராதம், தண்டனை விதிக்கப்படலாம். எலக்ட்ரீசியன், ப்ளம்பர், மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் மற்றும் பழுது பார்க்கும் வேலை செய்பவர்கள் பணிக்குத் திரும்பலாம்.
ஐடி துறையினரும், ஐடி நிறுவனங்களும் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி. பொது இடங்களில் நடமாடும் பொழுது, முகக் கவசம் அணிந்தே தீர வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.