இந்தியாவில் போலியான செய்திகளால் தான், பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூட்டமாக புலம் பெயர்ந்துள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், பல லட்சம் பேர் நடைபயணமாக, பல கிலோமீட்டருக்கு புலம் பெயர்ந்து சென்றனர். இப்பயணத்தால், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்த சம்பவம், குறித்து, இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மாலா ராய், இது குறித்து, எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய இணை உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், புலம்பெயரும் தொழிலாளர்கள் இவ்வளவு பேர் திடீரென்று நடைபயணமாக சென்றதற்கு, போலியான செய்திகளே காரணம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், மருந்து, உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டு வழங்கியது எனவும் கூறினார்.