ஜூன் 19ம் தேதி முதல் நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு! முழு விவரம்!

16 June 2020 அரசியல்
epscoronaa.jpg

இந்தியா முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக, வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், பல ஊரடங்குத் தளர்வுகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர். இந்த ஊரடங்குத் தளர்வால், இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சிப் பெற ஆரம்பிக்கும் என்றுக் கூறியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, வருகின்ற ஜூன் 19ம் தேதி முதல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 12 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். மேலும், இந்தப் பகுதிகளில் எதற்கெல்லாம் அனுமதி எனவும், எதற்கு அனுமதி இல்லை எனவும் விரிவான அறிக்கையும் வெளியாகி உள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் அனைத்தும் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன.

காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவை காலை ஆறு மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அம்மா உணவகங்கள் சென்னையில் தொடர்ந்து செயல்படும். டாக்ஸி, ஆட்டோக்களுக்கு தடை இருப்பினும், அவசரக் காலத்திற்காக டாக்ஸி, கார் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கலாம்.

இந்த நான்கு மாவட்ட எல்லைகளிலும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட உள்ளது. டீக்கடைகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கின் பொழுதும் கூட, சரக்கு வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

சென்னை மாவட்டத்தில் தகுதியான ஆவணங்களை சமர்பித்தால் மட்டுமே, திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட உள்ளது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள வங்கிகள் அனைத்தும் ஜூன் 29ம் தேதி மற்றும் 30ம் தேதி மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றது. ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இருப்பினும், டெலிவரி செய்பவர்கள் அடையாள அட்டை பெறுவது அவசியம்.

இந்த நான்கு மாவட்டங்களிலும், மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி உள்ளிட்டவைகளுக்கு முழு அனுமதி உண்டு. அச்சு, நீதிமன்றம் மற்றும் நீதித்துறை செயல்பட அனுமதி. கடுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், பணிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு செல்லும் பட்சத்தில், அதற்குரிய அனுமதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படாது. மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குரிய நிவாரணப் பொருட்கள் அனைத்தும், அப்பகுதி பணியாளர்களால் நேரடியாக வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கப்படும். தொண்டு செய்ய விரும்புபவர்கள் மற்றும் அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியுடன் செயல்படலாம்.

ஜூன் 21ம் தேதி மற்றும் ஜூன் 28ம் தேதி அன்று எவ்வித ஊரடங்குத் தளர்வும் அனுமதிக்கப்படாது. முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த இரு நாட்களிலும், எவ்வித அத்தியாவசியத் தேவைகளுக்கும் (மருத்துவம் தவிர்த்து) அனுமதி கிடையாது. இந்த நான்கு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி உள்ளது.

HOT NEWS