பின் வாங்கியது சீனா! கூடாரங்களை அகற்றியதாக மத்திய அரசு தகவல்!

06 July 2020 அரசியல்
ladakhlatest.jpg

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் மோதல் ஏற்படுகின்ற சூழல் நிலவிய நிலையில், தற்பொழுது சீனா பின் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் 5ம் தேதி அன்று, இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையில், லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில், இரு நாடுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் லடாக் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவின் பொழுது, சீனாவின் வீரர்கள் இந்திய வீரர்கள் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். மேலும், சீனாவின் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து, சரியானத் தகவலை சீனா வெளியிடவில்லை. இதனால், இரு நாட்டு உறவிலும் விரிசல் விழுந்தது. மேலும், தன்னுடைய 30,000க்கும் அதிகமான வீரர்களை சீன இராணுவம், கிழக்கு லடாக் பகுதியிலும், லே பகுதியிலும் நிலை நிறுத்தியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவின் இராணுவ வீரர்களும் அப்பகுதியில் குவிக்கப்பட ஆரம்பித்தனர். இந்தியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள், பீரங்கிகள், போர் விமானங்கள் என அனைத்தும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. மேலும், கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கேச் சொந்தம் என, சீனா தரப்பில் கூறப்பட்டது.

இது மேலும் இந்தியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனிடையே, கடந்த வாரம் இந்தியப் பிரதமர் மோடி, யாரும் எதிர்பார்த்திராத வகையில், லடாக் பகுதிக்குச் சென்று இந்திய இராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இது சீனாவிற்கு பதற்றத்தினை தந்துள்ளது. தற்பொழுது இந்திய மத்திய அரசு அதிரடியாகத் தகவல் ஒன்றினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதில், லடாக் பகுதியில் இருந்து சீனத் துருப்புக்கள் தற்பொழுது தங்களுடைய கூடாரங்களைக் காலி செய்துவிட்டு பின்வாங்கியுள்ளதாக, தகவல் வெளியிட்டுள்ளது. இது தற்பொழுது இரு நாட்டிற்கு இடையிலும் இருந்து வந்த பதற்றத்தினை தணிய வைத்துள்ளது.

HOT NEWS