அமெரிக்காவின் புகார்களுக்கு சீனா கண்டனம்! குறை கூறுவதை நிறுத்தி கொள்ளுங்கள்!

24 May 2020 அரசியல்
xijingpingsecurity.jpg

அமெரிக்க தொடர்ந்து ஆதாரமற்ற புகார்களை, எங்களைப் போன்ற மற்ற நாடுகள் மீது சுமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, சீன அரசாங்கம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து பரவி வருகின்றது. 53 லட்சம் பேர், இந்த வைரஸால் உலகம் முழுக்கப் பாதிப்படைந்து உள்ளனர். இந்த வைரஸால் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். அதுவும் அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர்.

இதனைத் தடுக்க இயலாமல், அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து திணறி வருகின்றது. பல்வேறு நாடுகள், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றன. இருந்த போதிலும், இந்த வைரஸ் வீரியமாக இருப்பதால், மருந்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தடுப்பு மருந்து தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் முக்கியக் காரணம் என, அமெரிக்கா தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றது.

இந்த வைரஸால், அமெரிக்கா கடுமையானப் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்டப் பல நாடுகள் சர்வதேச விசாரணையைத் தற்பொழுது முன் மொழிந்து உள்ளன. இதனிடையே, மே 22ம் தேதி அன்று, சீனாவின் நாடாளுமன்றம் கூடியது. அதில் பல விஷயங்கள் உரையாடப்பட்டன.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீன நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் ஹாங் யேசூயி, நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில், அமெரிக்காவின் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுக்களை சீன அரசாங்கம் கடுமையாக எதிர்க்கின்றது. சீனாவிற்கு எதிராக, அமெரிக்கா ஏதாவது செய்ய நினைத்தால், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் சீனாவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றுக் கூறியுள்ளார்.

ஊஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து, இந்த வைரஸ் பரவி உள்ளது என்றக் குற்றச்சாட்டினை மறுப்பதாகவும், இது விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயமாகும். எங்களை பொறுத்த வரையில், நாங்கள் மிகவும் தெளிவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருந்து வந்துள்ளோம். இந்த வைரஸை எங்களால் கடும் சிரமங்களுக்குப் பிறகே கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த வைரஸ் பற்றியத் தகவல்களை உலக நாடுகளுக்கும், உலக சுகாதார அமைப்பிற்கும் முதலில் இருந்தே போதுமானத் தகவல்களைத் தெரிவித்து வருகின்றோம். வீண் பழி சுமத்துவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்வது நல்லது என அவர் கூறியுள்ளார்.

HOT NEWS