சாட்சியளித்த காவலர்! விடிய விடிய அடித்ததாக வாக்குமூலம்!

01 July 2020 அரசியல்
revathisathankulam.jpg

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர் சித்திரவதை செய்யப்பட்டு, அடிக்கப்பட்டதாக, அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த ரேவதி என்ற பெண் காவலர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம், சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருக்கும் பென்னிங்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சப்ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுடைய ஆசனவாயிலில், லத்தியினை விட்டு துன்புறுத்தியதாகவும், அவர்களை மிருகத்தனமாகத் தாக்கியதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

அவர்கள் இருவரும் மரணமடைந்ததால், நீதிமன்றம் தற்பொழுது விசாரித்து வருகின்றது. நீதிமன்றத்தின் சார்பில், சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு நீதியரசர் பாரதிதாசன் வாக்குமூலம் வாங்கவும், விசாரிக்கவும் சென்றுள்ளார். அங்கு யாரும் அவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், போலீசார் அவரை ஒருமையில் பேசியதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அங்கிருந்த கான்ஸ்டபிள் மகாராஜ் என்பவர், உன்னால ஒன்னும் புடுங்க முடியாது போடா என்று, நீதிபதிக்குப் பின்னால் நின்று கூறியதாகவும் பாரதிதாசன் பதிவு செய்துள்ளார்.

போலீசாரிடம், அடிக்கப் பயன்படுத்திய லத்தியினை கேட்டதாகவும், அதற்கு அவர்கள் முதலில் மறுத்ததாகவும், பின்னர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் விளைவாக சிறிது லத்திகளை கொடுத்ததாகவும், காண்ஸ்டபிள் மகாராஜ் தன்னிடம் லத்தியே இல்லை எனக் கூறியதாகவும் நீதிபதி பதிவு செய்துள்ளார். மேலும், அங்கு அவ்வளவு காவலர்கள் இருந்தும், யாரும் வாக்குமூலம் தர முன்வரவில்லை எனவும், பின்னர் அங்கு காண்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்ற ரேவதி என்றப் பெண் காவலர் முன் வந்ததாகவும், அவர் பதிவு செய்துள்ளார்.

நீதிபதி உங்களுக்கு உரிய பாதுகாப்பானது, நீதிமன்றம் சார்பில் வழங்கப்படும் என்றுக் கூறப்பட்டதைத் தொடர்ந்து ரேவதி வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும், அவர் பேசும் பொழுது உணர்ச்சிவசப்பட்டதாகவும், அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் வழங்கியதாகவும் பின்னர், அதனைத் தொடர்ந்து அவர் பதற்றத்துடன் உண்மையைக் கூறியதாகவும் பதிவு செய்துள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோரினை, போலீசார் விடிய விடிய மிருகத்தனமாக அடித்தனர் என்று கூறியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும், வெறித்தனமாக அடித்ததாகவும், பின்னர் ரேவதி வாக்குமூலத்திற்கு கையொப்பம் வழங்க முன்வரவில்லை எனவும் பதிவு செய்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் அப்படியொரு சூழலை, காவல்நிலையத்திற்கு வெளியில் உருவாக்கியதாகவும், பின்னர் நீதிமன்றம் சார்பில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் உரியப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வாக்குமூலத்திற்கு கையொப்பம் வழங்கினார் எனவும் நீதிபதி பதிவு செய்துள்ளார்.

HOT NEWS