வருகின்ற நவம்பர் மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நாளொன்று 90,000 கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு 68 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் அவர்களுடைய உடலில் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு உள்ளது எனவும் சோதனை செய்து வருகின்றோம். தற்பொழுது வரை, ஊரடங்கு சமயத்தில் முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியினைக் கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை மீறியதாக 3.9 கோடி ரூபாயானது அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மட்டும் தினசரி 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 57,000 காய்ச்சல் முகாம்களை சென்னையில் தற்பொழுது வரை நடத்தியுள்ளோம். அதன் மூலம், 30 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். தொடர்ந்து இதனை 3 முதல் 4 மாதங்கள் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தற்பொழுது கொரோனா தொற்றானது 9 சதவிகிதமாக உள்ளது. அதனை ஏழு முதல் ஆறு சதவிகிதமாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் கொரோனா விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், கடை மூடப்பட்டு சீல் வைக்கப்படும். வருகின்ற நவம்பர் மாதத்தில் நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகைகள் வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், மக்கள் முகக் கவசத்தை அணியாமல் செல்வதால், இந்த கொரோனா தொற்றானது அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என, அவர் தெரிவித்து உள்ளார்.