பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில், இனி கொரோனா வைரஸ் உள்ளனவா என்ற சோதனையானது, இலசவமாக வழங்கப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3374 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 266 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர். 77 பேர் இந்த நோயின் தொற்றால், இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நோய் தொற்றினைக் கண்டுபிடிக்கும் கருவிகளானது ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இந்தியாவிலையே தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்தக் கருவிகளைச் செய்ய பல ஆயிரம் ரூபாயானது செலவாகும் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த நோய் தொற்றானது, பொது சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தான் செய்யப்பட்டு வந்தன.
தற்பொழுது இந்த நோய் தொற்றின் வீரியம் அதிகரிப்பதன் காரணமாக, தனியார் மருத்துவமனைகளுக்கும் நோய் தொற்றினைக் கண்டுபிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால், பல ஆயிரம் செலவாகும் என்கின்ற காரணமும் கூறப்பட்டு வந்தது. அதனை ஈடுகட்டும் பொருட்டு, பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜானா (Ayushman Bharat PM-JAY) என்ற திட்டத்தின் கீழ், இனி இந்த சோதனையை செய்து கொள்ளலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், சுமார் 50 கோடி இந்தியர்கள் பயன்பெறுவர் எனக் கூறப்படுகின்றது. இந்தத் திட்டத்தினை அமல்படுத்தியுள்ள, தனியார் மருத்துவமனைகளில், நோய் தொற்று இருப்பதாகக் கருதப்படுபவர்கள் சென்று, பரிசோதனை செய்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.
இந்த நோய் தொற்று எப்படி இருக்கும், அதன் அறிகுறிகள் என்ன என்பது உள்ளிட்டத் தகவல்கள் MoHFW இந்த வலைதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன. இதற்காக 1075 என்ற இலவச எண்ணும் வழங்கப்பட்டு உள்ளன. இது குறித்து விளக்கம் வேண்டுபவர்கள், இந்த எண்ணினைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.