இந்தியாவிற்குள் நுழைந்த கொரோனா வைரஸ்! 73 நாடுகளில் பரவியிருக்கின்றது!

04 March 2020 அரசியல்
coronavirus121.jpg

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை கோவிட்-19 என அழைக்கப்படும் இந்த வைரஸானது, உலகம் முழுக்க சுமார், 73 நாடுகளுக்குப் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டின் கடைசி மாதத்தில், சீனாவின் ஊஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து பரவ ஆரம்பித்தது கோவிட்-19. அடுத்த மூன்று மாதங்களுக்குள், கிட்டத்தட்ட உலகின் முக்கால்வாசி நாடுகளுக்குப் பரவி விட்டது. தற்பொழுது வரை, இந்த வைரஸ் பாதிப்பிற்கு, 73 நாடுகள் இரையாகி உள்ளன.

சீனாவினைத் தொடர்ந்து, ஈரானில் இந்த வைரஸ் காரணமாக, பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் துணை அதிபர், சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட பலரும் இந்த கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்டார்டிகா கண்டத்தினைத் தவிர்த்து, மற்ற அனைத்து கண்டங்களுக்கும் இந்த வைரஸானது பரவியுள்ளது.

இந்த வைரஸால் ஈரானில் 4,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரான் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் 23 பேருக்கு, இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் 3,00,000 இராணுவ வீரர்கள் தற்பொழுது, பரிசோதிக்கப்பட்டு பணிகளில் அமர்த்தப்பட்டு உள்ளனர். தென் கொரியாவில் 50க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.

உலகம் முழுக்க சுமார், 85,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 3,100க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக மரணமடைந்துள்ளனர். அதே போல், இந்த வைரஸ் பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4,000 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பானது, தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், அரசாங்கம் அனைத்தையும் கவனித்து வருகின்றது எனவும் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில், யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது வரை, சுமார் 28 பேருக்கு இந்த கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களும், முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

HOT NEWS