இதுவரை, சீனாவில் ஆறு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது, இந்த கோரானா வைரஸ். அது மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டும் உள்ளனர், என்ற அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
சீனாவின் ஊஹான் என்ற பகுதியில் இருந்து தான், முதன் முதலில் இந்த கோரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. ஆனால், அப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதனையடுத்து, கோரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள், பயணிப்பதன் காரணமாக இந்த வைரஸ் வேகமாக நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. மேலும், ஊஹான் விமான நிலையத்தில், இன்ப்ரா ரெட் சோதனை முறை இல்லாத காரணத்தினால், யாருக்கு பாதிப்பு இருக்கின்றது என்பதுப் பற்றி அறிய இயலவில்லை.
இவ்வாறான சூழலில், இந்த கோரானா வைஸ் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் பலப் பகுதிகளுக்குப் பரவி இருக்கின்றது. இந்த வைரஸினை, சீன அரசாங்கம் கடந்த நவம்பர் இறுதியில் கண்டறிந்துள்ளது. இருப்பினும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், முதல் பலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இந்த வைரஸானது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை சீன அரசாங்கம் உணர ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸால் தற்பொழுது வரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், 300 பேர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களாக அடையாளம் கண்டறிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலர், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. இந்த வைரஸால், வயது முதிர்ந்தவர்களே முதலில் உயிரிழக்கின்றனர் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், சீனாவின் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. ஊஹான் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறுவதற்குள் பல்வேறு முன்னெச்சரிக்கை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, மற்ற ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இந்த வைரஸானது, சீனாவில் மட்டுமின்றி தற்பொழுது தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களிடம் பரவும் தன்மை கொண்ட வைரஸாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள நிலையில், இது மேலும் பரவாமல் இருக்க அனைத்து நாடுகளும் தற்பொழுது முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.