முதல் கட்டச் சோதனையில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, 2வது கட்ட சோதனைக்கு இந்தியாவின் கோவாக்ஸின் மருந்து சென்றுள்ளது.
உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, ரஷ்யா முதன் முதலாக தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து உள்ளது. சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸிற்கு எதிரான மருந்து தயாரிக்கும் முயற்சியின் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதில், இந்தியா சார்பில் கடந்த ஜூலை மாதம் கோவாக்ஸின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த மருந்து மூன்று கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது எனவும், அந்த மருந்தானது பரிசோதனைகளுக்குப் பிறகு கிடைக்கின்ற பலனைப் பொறுத்து பயன்பாட்டிற்கு வரும் என்றுக் கூறப்பட்டது. இந்த மருந்தினை சோதிக்க சென்னை உட்பட இந்தியாவின் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், முதல் கட்ட சோதனைகள் நடைபெற்றன. தற்பொழுது முதல் கட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தற்பொழுது இந்த கோவாக்ஸின் மருந்தானது, 2வது கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதற்காக கௌகாத்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். இருப்பினும், இந்த சோதனையானது எப்பொழுது ஆரம்பிக்கும் என அவர் தெரிவிக்கவில்லை.
இந்த சோதனை வெற்றிப் பெறும் பட்சத்தில், கடைசிக் கட்ட சோதனைக்கு இந்த கோவாக்ஸின் மருந்து உட்படுத்தப்படும். பின்னர், சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.