இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ள கோவாக்ஸின் மருந்தானது, இரண்டாவது கட்ட ஆய்விற்கு சென்றுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இதனால், இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல நாடுகளும் இணைந்துள்ளன. இதில் இந்தியாவின் சார்பில் கோவாக்ஸின் என்ற மருந்தானது, தயாரிக்கப்பட்டு உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமானது, இந்த தடுப்பூசியினை தயாரித்து உள்ளது.
இந்த தடுப்பூசியின் சோதனையானது, இந்தியாவின் 12 இடங்களில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி அன்று, இந்த தடுப்பூசியின் சோதனை தொடங்கியது. மொத்தம் 3 கட்டங்களாக இந்த தடுப்பூசி சோதனையானது நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட சோதனையானது, தற்பொழுது முடிவடைந்து உள்ளது. அதில், எவ்வித பாதிப்பும் யாருக்கும் உண்டாகவில்லை எனவும், முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து, தற்பொழுது 2வது கட்ட சோதனையானது தொடங்கி உள்ளது. இதில் 12 முதல் 65 வயது உள்ளவர்கள் மீது, இந்த சோதனையானது நடைபெற உள்ளது. முதற்கட்ட சோதனையில், 18 முதல் 55 வரையில் உள்ளவர்கள் மீது, பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக் குறித்துப் பேசியுள்ள மத்திய சுகாதாத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியா தயார் செய்யும் தடுப்பூசியானது, அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்றார்.
பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை என்றால், நானே அதன் முதல் ஊசியினைச் செலுத்திக் கொள்ளத் தயார் எனவும் கூறியுள்ளார். பொருளாதார அடிப்படையிலும், நோயின் தீவிரத்தின் அடிப்படையிலும் முதலில் யாருக்கு இந்த ஊசியினை போட வேண்டுமோ, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.