இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்தானது, ஹைதராபாத் நகரில் உள்ள நிஜாம் அரசு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பான ஐசிஎம்ஆர் அமைப்பும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து, புதிதாக கோவாக்ஸின் என்ற மருந்தினை கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடித்தது. இதனை இந்தியாவின் 12 இடங்களில் சோதனை செய்ய உள்ளதாக, அறிவிப்பும் வெளியானது. மேலும், இந்த மருந்தானது வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்றுக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், இந்த மருந்தின் முதல் சோதனையானது, ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள நிஜாம் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள நோயாளியின் ரத்தத்தில் இந்த மருந்தின் முதல் டோஸானது செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் கண்காணிக்கப்படுவார். அதனைத் தொடர்ந்து 14 நாட்களுக்குப் பிறகு, இந்த மருந்தின் இரண்டாவது டோஸானது வழங்கப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. இதற்காக, தன்னார்வலர் ஒருவர் முன்வந்துள்ளார்.
இரண்டாவது டோஸ் கொடுத்து 2 நாட்கள் கழித்து, 3வது டோஸ் வழங்கப்படும் பின்னர், அடுத்த கட்ட ஆய்விற்கு இந்த மருந்து உட்படுத்தப்படும். இந்த மருந்தினை, மிகத் தீவிரமாக இந்திய மருத்துவர்களும், ஆய்வாளர்களும் நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.