ரஜினி நடிக்கும் #தலைவர்168 படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது, தர்பார் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். அது பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் இயக்க உள்ளது. அதன் அறிவிப்பு ஏற்கனவே, வெளியாகி இருந்தது. அப்படத்தினை சிறுத்தை சிவா இயக்குகின்றார். விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றிப் பெற்றதனைத் தொடர்ந்து, அப்படத்தினை இயக்கிய சிவாவினை அழைத்த ரஜினிகாந்த், அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். ரஜினிகாந்த் விரைவில் சிவாவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்த அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
இப்படத்திற்கு இசையமைக்க, அனிருத்தின் பெயரே முதலில் அடிபட்டுள்ளது. ஆனால், விவேகம் படத்தின் பொழுது, அனிருத்திற்கும் இயக்குநர் சிவாவிற்கும் இடையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால், சிவாவிற்கு அனிருத்தினை இப்படத்தில் இணைப்பதில் விருப்பமில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதனை நிரூபிக்கும் விதத்தில், இப்படத்திற்கு அனிருத் இல்லாமல், விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளரே இசையமைக்க உள்ளார். இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டி இமான் தற்பொழுது, #தலைவர்168 படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதனை, சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி இமான் கடைசியாக இசையமைத்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் பாடல்கள் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சிறுத்தை சிவாவும் இமானும் இணைந்த விஸ்வாசம் படத்தின் பாடல்கள் பிளாக்பஸ்டர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.