15 ரூபாய்க்கு உணவு! அசத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை! டெல்லியில் தேர்தல் பிரச்சாரம்!

03 February 2020 அரசியல்
delhicongress.jpg

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில், தேர்தல் அறிக்கையினை வெளியிட்டது.

டெல்லியில், இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பாஜக, ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கிடையே, கடுமையானப் போட்டி நிலவி வருகின்றது. மும்முனைப் போட்டியாக, தற்பொழுது தேர்தல் நடைபெற உள்ளது.

மூன்று கட்சிகளுமே, தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. இந்நிலையில், பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையினை வெளியிட்டது. அதற்குப் போட்டியாக, தற்பொழுது காங்கிரஸ் கட்சியானது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு, மாத உதவித் தொகையாக 5,000 முதல் 7,500 வரை வழங்கப்படும். நீர் மற்றும் மின்சாரப் பயனர்களுக்கு, கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படும். மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க்கபடும். 15 ரூபாய்க்கு, தரமான உணவானது, இந்திரா காண்டீன் திட்டத்தின் கீழ், 100 இடங்களில் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள், மூன்றாவது பாலினத்தவர், மற்றும் மூத்த குடிமக்களுக்கு மாத உதவித் தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படும். டெல்லியில், 15,000 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். நேரடிப் பணப்பரிமாற்றத்தின் மூலம், படிக்கின்ற குழந்தைகள், மாணவ மற்றும் மாணவியருக்கு, மெட்ரோ ரயிலில் பயணிக்க, மாதம் 300 ரூபாயானது, வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். பெண்களுக்கு பிஎச்டி வரைக்கும் இலவச கல்வி, பெண்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை திட்டம் உருவாக்கப்படும்.

இவ்வாறு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் உள்ள திட்டங்கள், மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால், மக்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS