டெல்லியில் போராடி வருகின்ற விவசாயிகளைத் தடுப்பதற்காக, முள் வேலிகள், இரும்பு பேரிகேடுகள் மற்றும் காண்க்ரீட் தடுப்புகளை அமைத்து, டெல்லி போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 65 நாட்களுக்கும் மேலாக, டெல்லியின் எல்லைகளில் பல லட்சம் விவசாயிகள், தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசானது, புதியதாக 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இது இந்திய விவசாயிகளிடம் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியது. இதனை முன்னிட்டு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கடந்த குடியரசுத் தினத்தன்று டெல்லியில் மாபெரும் வரலாறு காணாத டிராக்டர் பேரணியினை நடத்தினர். இது இந்தியாவின் வரலாற்று கருப்பு நாளாகப் பார்க்கப்பட்டது. மேலும், போலீசாருடன் மோதலிலும், வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளு முதலியவற்றிலும் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த சூழலில், அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் புதிய முயற்சியினை கையிலெடுத்துள்ளனர்.
இரும்பலான பேரிகேடுகள், தடுப்புகளை போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக வைத்துள்ளனர். அத்துடன், கான்கீரிட் தடுப்புகளையும் கட்டி வருகின்றனர். மேலும், வாகனங்கள் உள்ளே வராத அளவிற்கு, இரும்பு ஆணிகளையும், கூர்மையான இரும்புத் தடுப்புகளையும் அமைத்துள்ளனர். இதனால், விவசாயிகளால் உள்ளே வந்து போராட முடியாது எனக் கருதுகின்றனர். இத தற்பொழுது பேசுபொருளாகி உள்ளது.