டெல்லி கலவரம் காரணமாக 46 பேர் பலி! 1000 பேர் கைது!

03 March 2020 அரசியல்
delhiprotest12.jpg

தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின்படி, டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் காரணமாக சுமார் 46 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம், வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் சிஏஏ ஆதரவினருக்கும், சிஏஏ எதிர்ப்பவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இது பெரிய அளவிலான கலவரமாக மாறியது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. ஷாரூக் என்ற நபர், கையில் துப்பாக்கியினை எடுத்துக் கொண்டு, போலீஸ் உட்பட பலரை மிரட்டிய வீடியோக்கள் வைரலாகி வந்தன.

டெல்லியில் நடைபெற்ற இந்தக் கலவரத்தில், 46 பேர் மொத்தமாக இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 1000க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்துள்ளனர். 40 கொலை வழக்குகள் உட்பட மொத்தம், 350 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த கலவரத்தின் காரணமாக, சென்ற வாரம் டெல்லியில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பொதுமக்கள் நடமாட்டமும், வெகுவாக குறைந்தது. பைஜான்பூரா, முஷ்தபாபாத், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பலப் பகுதிகளில், 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, இந்திய துணை இராணுவம், மத்தியக் காவல்படை உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை, கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. தற்பொழுது நிலைமை சீராகி உள்ளது. பொதுமக்கள் நடமாடத் தொடங்கி உள்ளனர். டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல், கலவரம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்டார்.

HOT NEWS