மஹாராஷ்டிராவில், தற்பொழுது அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்துவிட்டது எனலாம். திடீரென பாஜக ஆட்சியமைத்ததால், உச்சநீதிமன்றம் சென்ற சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தற்பொழுது, மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று முதல்வர் பட்னாவிஸை சந்தித்த அஜித் பவார் தன்னுடைய துணை முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்வதாக செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். இதனால், நாளை நம்பிக்ககை வாக்கெடுப்பு நடக்காது.
மேலும் நாளை மாலையில், சிவசேனா தலைமையில் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைய உள்ளது. சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்ரே, முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின், பாலா சாகிப் தோரட் மற்றும் ஜெயந்த் பட்டீல் ஆகியோர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
இது குறித்துப் பேசிய பட்னாவீஸ், நாங்கள் சிவசேனாவுடன் எவ்வித ஒப்பந்தமும் இடவில்லை எனவும், மக்களுக்காகவே போராடினோம். அவர்களும் எங்களுக்கே ஆதரவு அளித்துள்ளனர் எனவும் கூறினார். மேலும், யார் ஆட்சியமைத்தாலும் சரி, அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். நாங்கள் ஸ்திரமான ஆட்சியினை வழங்கி இருப்போம் எனக் கூறியுள்ளார்.
பட்னாவீஸ், ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தினை அளித்தார். இது பற்றிப் பேசிய சிவசேனா கட்சியின், சஞ்சய் ராவத், சிவசேனா தலைமையில் தான் மஹாராஷ்டிராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நடைபெறும் எனக் கூறியுள்ளார்.