பியார் ப்ரேமா காதல், இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் படத்திற்குப் பிறகு நடிகர் ஹரிஸ் கல்யாண் நடித்திருக்கும் திரைப்படம் தனுசு ராசி நேயர்களே!
இந்தப் படத்தில் ஜோதிட விரும்பியாக ஹரிஸ் நடித்துள்ளார். வேற்று மொழிப் பேசும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என, ஜோதிடர் கூற, அப்படியொருப் பெண்ணைத் தேடுகின்றார் ஹரிஸ். அவருக்கு அப்படிப்பட்ட பெண்ணும் கிடைத்தது. வேறு யாரும் அல்ல, தன்னுடைய முன்னாள் காதலியின் தோழி தான்.
சரி, ஆபத்திற்குப் பாவம் இல்லை, காதலிப்போம் என காதலிக்கின்றார். ஆனால், அவருடைய தற்கால காதலிக்கோ, செவ்வாய்க்கு செல்வது தான் லட்சியம். அவரை, தன்னுடைய காதல் வலையில் விழ வைத்தாரா இல்லையா என்பது தான், படத்தின் மீதிக் கதை.
சும்மா சொல்லக் கூடாது. ஹரிஸ் உடம்பில் எங்கேயோ மச்சம் இருக்கின்றது. அதனால் தானோ என்னவோ, படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் முத்தக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள் அமைந்துவிடுகின்றன. முந்தையப் படங்களைக் காட்டிலும், இந்தப் படம் ரொம்ப சுமார் தான். படத்தில், யோகி பாபு இருக்கின்றார். அவ்வப்பொழுது வந்து, அடுத்து என்ன நடக்கின்றது எனக் கூறுவது மட்டுமே அவருடைய வேலை.
இப்பொழுதெல்லாம், யோகிபாபுவைப் பார்த்தால் யாருக்கும் சிரிப்பு வரமாட்டேங்குறது. ஒரு வேளை சரக்கு அவ்வளவு தானோ? யாருக்குத் தெரியும்? படத்தில் அனிருத் பாடும் பாடலைத் தவிர மற்ற எந்தப் பாடலும் ஹிட்டாகவில்லை. இதற்கு இசையமைப்பாளரைக் குறைக் கூற முடியாது. காரணம் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜிப்ரான்.
படத்திற்கு ஏற்றப் பாடல்களைப் பெற வேண்டியது ஒரு இயக்குநரின் கடமை. அதனை இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் பாரதி தவறவிட்டுவிட்டார். படத்தில் வரும் இரு நாயகிகளுமே, தங்களுடையக் கடமையை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால், படம் தான் நம்மை ரசிக்க வைக்க மறுக்கின்றது.