வழக்குகளை சந்திக்க வழக்கறிஞர் படை! ஸ்டாலின் அறிவிப்பு!

24 May 2020 அரசியல்
mkstalincovid.jpg

இன்று நடந்த கட்சிக் கூட்டத்தில், வழக்குகளை சந்திப்பதற்காக வழக்கறிஞர் படை ஒன்று, உருவாக்கப்படுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின். இக்கூட்டத்தில் துவக்கத்தில், கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்று (23.5.2020) காலை, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அவர்களை ஆளும் அ.தி.மு.க. அரசு கைது செய்தபோது, அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற்றிட நீதிமன்றத்தில் வாதாடிய தி.மு.க. சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

உழைக்கும் தொண்டர்களைக் காக்க கழகம் நேரடியாகக் களம் இறங்கும்! அதிவிரைவில் மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியல்!

“பசிப்பிணியைப் போக்கி, பட்டினிச் சாவினைத் தடுத்திடும்” திராவிட முன்னேற்றக் கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” என்ற ஆக்கபூர்வமான திட்டத்திற்கும், செயலாக்கத்திற்கும், தமிழக மக்கள் அளித்த அமோக வரவேற்பையும் ஆதரவையும் பொறுத்துக் கொள்ள முடியாமலும் - கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அனைத்திலும், குறைபாடுகளினாலும் குளறுபடிகளினாலும் முழுத் தோல்வியடைந்துவிட்ட விரக்தியிலும் குரோதத்திலும் - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மீதும் - கழக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும், சட்ட நெறிமுறைகளை தமது விருப்பத்திற்கேற்ப வளைத்து, பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது “கொரோனா ஊழல்” புகார் அளித்த கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களை “கொரானா காலத்திலும்” அவசரமாக அதிகாலையில் கைது செய்தது; “ஏன் ஆய்வு கூட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை” என்று கேட்டதற்காக கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., அவர்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவரை புகார் கொடுக்க வைத்து, வழக்குப் பதிவு செய்தது; உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணியின் ஊழல்களைத் தட்டிக்கேட்கும் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும் நா.கார்த்திக் மீதும், கோவை - திருப்பூர் பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் மீதும் போலீஸை ஏவி விட்டு வழக்குப் பதிவு செய்து - கைது செய்வது; கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராமமூர்த்தியை கைது செய்தது; முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ஊழலைப் பதிவிட்டதற்காக கழக தகவல் தொழில்நுட்ப அணியின் ஐந்து நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது - இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் காவல்துறையை தமது மனம்போன போக்கில் பயன்படுத்தி, கழகத்தினர் மீதும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும், அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தி - பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது என்ற இந்த அனைத்தும் ஜனநாயக விரோத, தன்னிச்சையான, அராஜகச் செயல்கள் என்பதை விட - கருத்துச் சுதந்திரத்தையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறையிலான செயல்பாட்டையும், கெட்ட எண்ணத்துடன் தடுக்கும் கேடுகெட்ட, அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

தி.மு.க.வினர் மீது வழக்குப் போடுவதற்கும், கைது செய்வதற்கும், உள்ளாட்சியின் “ஊழல் அமைச்சராக இருக்கும்” திரு. வேலுமணி, போலீஸ் துறைக்கும் “நிஜ அமைச்சராக”ச் செயல்படுவதும் - அவருக்கு காவல்துறை அதிகாரிகள் கைகட்டி நின்று கட்டளைகளை ஏற்றுச் சேவகம் செய்வதும், இன்றைக்கு எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கு சட்டத்தின் முன்பு தகுந்த பதிலைச் சொல்ல வேண்டிய கடினமான துன்ப காலம், திரு. வேலுமணிக்கும், அவருக்கு விரும்பித் துணை போகும் காவல்துறை அதிகாரிகளுக்கும், வெகு தொலைவில் இல்லை என்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளது.

“கொரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யோசிக்கவே, 2 மாதங்கள் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி. கேரளாவில் 30.1.2020 அன்று முதல் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட பிறகும் - மாவட்டந்தோறும் கூலி கொடுத்து, ஆட்களைக் கூட்டி வந்து - அரசு விழாக்களை நடத்தி, ஆனந்தப் பட்டுக் கொண்டார் முதலமைச்சர். வரப் போவதை அறிந்து கழகத் தலைவர் உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்தும், அதை அலட்சியப்படுத்தி, 24.3.2020 வரை சட்டமன்றத்தை நடத்தினார் எடப்பாடி.

22.3.2020 அன்றே நாடு முழுவதும், “சுய ஊரடங்கு” மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்டும் - பெற்றோர் பதற்றத்தைக் கண்டு கொள்ளாமல், மார்ச் 24-ஆம் தேதி ‘பிளஸ் - டூ’ மாணவர்களை தேர்வு எழுத வைத்தார்.

“சீனாவில் நோய் வந்த போதே மருத்துவ உபகரணங்கள் வாங்க ஆணை பிறப்பித்து விட்டோம்” என்று இப்போது செயற்கையாக “விளம்பரம்” தேடிக் கொள்ளும் முதலமைச்சர், தமிழகத்தில் முதன் முதலில் கொரோனா நோய் கண்டறியும் அதிவிரைவுப் பரிசோதனை (Rapid Test) நடத்த, மூன்று மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார் என்பது வேதனைக்கு மேல் வேதனை. அந்த அதிவிரைவு பரிசோதனைக் கருவிகளும் அதிக விலைக்கு வாங்கப்பட்டு - டெல்லி உயர்நீதிமன்றம் தலையில் ஓங்கிக் “குட்டிய” பிறகு - வேறு வழியின்றி, அவை தரமற்ற கருவிகள் என்று ஒப்புக் கொண்டு - திருப்பிக் கொடுத்தார் முதலமைச்சர்.

உயிர்காக்கும் சிகிச்சைக் கருவியை, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முயற்சிக்காமல், ஏதோ போகிற போக்கில் பொறுப்பற்ற முறையில் வாங்கியது அ.தி.மு.க. அரசுதான்! என அவர் பேசியுள்ளார்.

HOT NEWS