திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை! துரைமுருகன் பேட்டி!

16 January 2020 அரசியல்
duraimurugan1.jpg

திமுக கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் விலகிப் போனால் போகட்டும். அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என, திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பொழுது, திமுகவிற்கு காங்கிரஸ் கட்சியானது பெரிய அளவில் உதவிகரமாக செயல்படவில்லை. இதனால், திமுக காங்கிரஸ் கட்சியின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என, பெரும்பாலான பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. அதே போல, மறைமுகத் தேர்தலில், திமுக கட்சியினை விட, அதிமுக அதிக இடங்களை வென்று அசத்தியது.

இதனால், திமுகவின் தலைமை கடுப்பில் இருந்ததாகவும், அதனால் தான் காங்கிரஸ் நடத்தியப் பொதுக்கூட்டத்தில், திமுக பங்கேற்கவில்லை என்ற தகவலும் அரசல், புரசலாக வெளியானது. இதனிடையே, திமுக தலைமை தங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்கியதாகவும், இருப்பினும் கட்சியின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களால் எங்களுக்கு அவை கிடைக்கவில்லை எனவும், கே எஸ் அழகிரி வருத்தம் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டு இருந்தார். அதில், வருத்தம் தெரிவித்து இருந்தது உண்மை தான். அது என்னுடையத் தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல எனத் தெரிவித்து இருந்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, திமுக தலைவரும் நானும் நல்ல ஒற்றுமையாக தான் இருக்கின்றோம். இப்பொழுது கூட, நான் அவருக்கு பொங்கல் வாழ்த்துக் கூறி இருக்கின்றேன் என்றார்.

ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் பிரிந்து சென்றால், யாருக்க நஷ்டம் ஏற்பட்டு விடப் போகின்றது? எங்களுக்கு என்ன நஷ்டம்? கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால், எங்களுடைய வாக்கு வங்கி பாதிக்காது என்று கூறியுள்ளார்.

HOT NEWS