போராட்டத்தை அடக்க இராணுவத்தினைப் பயன்படுத்துவேன்! டிரம்ப் பேச்சு!

02 June 2020 அரசியல்
trumpsign.jpg

அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற போராட்டம் அடங்கவில்லை என்றால், கண்டிப்பாக அமெரிக்க இராணுவத்தினைப் பயன்படுத்துவேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த வாரம், மினிசோட்டா மாகணத்தினைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற 46 வயதுடைய கருப்பினத்தவர் போலீசாரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவம், அமெரிக்காவில் வசித்து வருகின்ற கருப்பினத்தவர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, கொரோனா வைரஸால் அமெரிக்க நாடே நிலை குலைந்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு மரணமடைந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரமும் அங்கு பரவிய கொரோனாவால் திண்டாட்டத்தினைக் கண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கருப்பினத்தவர் கொலையால் மொத்த நாடும் ஸ்தம்பித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கியமான மாகணங்களில், தற்பொழுது தீவிரமாக கருப்பினத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தினைக் காரணம் காட்டி, பலரும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஐந்தாயிரத்திற்கும் அதிகமான போலீசார், பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கின்ற காரணத்தால், அமெரிக்க அதிபர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் பேசுகையில், நாட்டில் நடைபெறுகின்ற இந்தப் போராட்டங்களை, மாகாண அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பின மனிதரின் மரணத்திற்கு நீதி கட்டாயம் வழங்கப்படும்.

தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால், கண்டிப்பாக அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும், அமெரிக்க அதிபர் என்ற முறையில், நம் நாட்டின் இராணுவத்தினைப் பயன்படுத்த வேண்டி இருக்கும் என்றுக் கூறியுள்ளார். இராணுவத்தினைப் பயன்படுத்தி, போராட்டத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். இது, போராட்டக்காரர்கள் மத்தியில், கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS