டைகர் டிரயல்! லாங் லிவ் இந்தியா-யூஎஸ் பிரண்ட்ஷிப்! புகழ்ந்து கொண்ட தலைவர்கள்!

25 February 2020 அரசியல்
namastetrump1110.jpg

நேற்று, மதியம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் அஹமதாபாத் நகரில் உள்ள, மோதிரா மைதானத்தில் உரையாற்றினர்.

இதனைக் காண, ஒன்றரை லட்சம் பேர் மைதானத்தில் திரண்டனர். இதனால், இரண்டு நாட்டுத் தலைவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிபர் டிரம்பும், மோடியும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டனர். டீ கடையில் இருந்து, நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ள மோடி, என்னை மிகவும் கவர்ந்துள்ளார் என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியாவும் அமெரிக்காவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கான ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பில் கையெழுத்தாக உள்ளது என்றார். மேலும், இந்திய-அமெரிக்க படைகள் கூட்டாக இணைந்து, டைகர் டிரயல் என்ற பெயரில், கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடும் என தெரிவித்தார்.

இந்தியாவும், அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் அதிக அக்கறை செலுத்தும் எனவுக் கூறினார். இரண்டு நாடுகளும், பொருளாதாரத்தினை பறிமாறிக் கொள்வதாகவும், இரண்டு நாட்டு மக்களும், ஒற்றுமையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அதிபர் ட்ரம்ப் விமான நிலையத்திற்கு வரும் பொழுது, அங்கு சென்று காத்திருந்த மோடி, அவரை விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார். பின்னர், காந்தியின் ஆசிரமத்திற்கு சென்று, அங்கிருந்த காந்தியின் புகைப்படத்திற்கு, கைத்தறியால் உருவான துண்டினை அணிவித்து, இருவரும் மரியாதை செய்தனர். பின்னர், காந்தி பயன்படுத்திய இராட்டையினை அதிபர் டிரம்பிற்கு, பிரதமர் மோடி பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார். டிரம்பின் மனைவி, மெலானியா டிரம்பும் இதனை ஆர்வமுடன் கவனித்தார்.

HOT NEWS