விரைவில் அமெரிக்காவில் ஊரடங்கு நீக்கம்! ட்ரம்ப் முடிவு!

15 April 2020 அரசியல்
donaldtrumpcovid19.jpg

அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் ஆறு லட்சம் பேர் அங்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று ஒரே நாளில், 2400 பேர் மரணமடைந்து உள்ளனர். அங்குள்ள நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. தெருவோரும் வசிக்கும் ஆதரவற்றவர்கள், தெருக்களிலேயே செத்து மடிகின்றனர். இதனால், அங்கு கடும் அச்சம் உருவாகி உள்ளது. ஆனால், அதைப் பற்றி எல்லாம், அதிபர் ட்ரம்ப் கவலைப்படுவதாக இல்லை.

உலக சுகாதார மையம், உளவுத் துறை, மருத்துவத்துறை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் எனப் பலரும் எச்சரித்தும், ஊரடங்கு பற்றிக் கவலைப்படாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் அசால்ட்டாக இருக்கின்றார் என, தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இது ட்ரம்பிற்கு கடும் நெருக்கடியாக அமைந்தது.

இதுவரை அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சுமார் 24,000 தாண்டியுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய வல்லரசு என மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் தான், இந்த வைரஸ் பாதிப்பானது ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றது. அமெரிக்காவில் உள்ள முக்கால்வாசி பேர் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். ஏப்ரல் 30ம் தேதி வரை, அங்கு ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசினார் ட்ரம்ப். அதில், ஊரடங்கினை நீக்குவதற்கான முடிவுகளை தாம் எடுத்துவிட்டதாகவும், இதற்காகப் பல்வேறுத் துறை வல்லுநர்களிடம் தாம் பேசியதாகவும் கூறினார். தற்பொழுது ஊரடங்கினை நீக்குவதற்குத் தேவையான அனைத்து திட்டங்களும் தயாராக இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையம் உட்பட பல நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. தற்பொழுதுள்ள ஊரடங்கினை திரும்பப் பெற்றால், கண்டிப்பாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைவர் என்றுக் கணித்துள்ளனர். ஆனால், ட்ரம்பின் கவனம் முழுக்க நாட்டின் பொருளாதாரத்தினை பற்றி மட்டுமே உள்ளது. தற்பொழுது ஊரடங்கினை நீக்கினாலும், அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப, எப்படியும் 18 மாதங்கள் ஆகும் என, பெடரல் வங்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS