அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
தொடர்ந்து தகவல் கசிவு மற்றும் பயனர்களுடையத் தகவல்களுக்குப் பாதுகாப்பின்மை என்றக் காரணங்களை சுட்டிக் காட்டி, டிக்டாக் ஆப்பினை அமெரிக்க நிறுவனத்திடம் விற்று விட வேண்டும் எனவும், இல்லையென்றால் கண்டிப்பாக செப்டம்பர் 15ம் தேதி அன்று டிக்டாக் செயலிக்கு, அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இவருடை அறிவிப்பால், டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட்டான்ஸ் ஆடிப் போனது. தொடர்ந்து, மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்கள் டிக்டாக் செயலியினை வாங்க பேச்சுவார்த்தை நடத்தின.
இருப்பினும், பைட்டான்ஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சலுகையினை ஏற்க மறுத்தது. கிட்டத்தட்ட இந்த செயலி தடை செய்யப்பட்டு விடும் என்ற நிலையில், செப்டம்பர் 15ம் தேதி அன்று ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம் ஆகியவை டிக்டாக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, அமெரிக்கப் பயனர்களின் தகவல்கள் அனைத்தும் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் பராமரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் உள்ளன.
இந்த செய்தியினை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அதிபர் ட்ரம்ப், டிக்டாக் செயலியினை தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்து உள்ளார். இந்த அமெரிக்க நிறுவனங்களின் ஒப்பந்தத்தால் 25,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். உலகளவில் பைட்டான்ஸ் நிறுவனத்தில் 40% முதலீடானது, அமெரிக்கர்களால் செய்யப்பட்டு உள்ளது. தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், டிக்டாக் நிறுவனத்தின் 80% பங்குகள் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும்.
மீதமுள்ள 20% சர்வதேசப் பங்குகளை அமெரிக்க நிறுவனங்கள் கையாள உள்ளன. இதனால், பயனர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும். ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் இணைந்து, டிக்டாக் க்ளோபல் என்ற புதிய நிறுவனத்தினை உருவாக்க உள்ளன. அந்த நிறுவனம் அமெரிக்காவின் பங்குகளைக் கையாள உள்ளது. அமெரிக்காவினைப் பொறுத்தமட்டில், 53% பங்குகளை அந்த நிறுவனமும், 36% பங்குகளை பைட்டான்ஸ் நிறுவனமும், ஆரக்கிள் நிறுவனம் 12.5% பங்குகளையும் கையாள உள்ளது.
இதே போல், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் டிக்டாக்குடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், இந்தியாவிலும் டிக்டாக் செயலியினை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றுக் கூறப்படுகின்றது.