74வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் தேசியக் கொடியினை ஏற்றினார்.
சென்னையில் உள்ள கோட்டையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். பின்னர், தன்னுடைய சுதந்திர தின உரையினை அவர் வழங்கினார். அவர் பேசுகையில், தியாகிகளுக்கான ஓய்வூதியமானது 16,000 இருந்து 17,000 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். பின்னர், விருதுகளை வழங்க ஆரம்பித்தார்.
அதன்படி, டாக்டார் ஏபிஜே அப்துல்கலாம் விருதானது, நாகப்பட்டினத்தினைச் சேர்ந்த ஆனந்தம் என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டது. சிறந்த கூட்டுறவு வங்கியாக, சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கியும், சிறந்த மாவட்டமாக வேலூர் மாவட்டமும், சிறந்த மருத்துவராக சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த சியாமளா என்பவருக்கும், சிறந்த தொண்டு நிறுவனமாக சென்னையில் உள்ள சிஎஸ்ஐ காதுகேளாதோர் பள்ளிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த சமூகப் பணியாளராக திருச்சியினைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவருக்கும், சிறந்த நிறுவனமாக சக்தி மசாலா நிறுவனமும் கௌரவிக்கப்பட்டன. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட 27 பேருக்கும், சிறந்த உள்ளாட்சி அமைப்பிற்கான விருதினை 7 பேருக்கும், துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதானது, பெரம்பலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகியோருக்கும் வழங்கி கௌரவித்தார்.