இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

11 March 2020 அரசியல்
nadinedorries.jpg

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரையிலும், இந்த நோயினால் சுமார் 4,300 பேர் மரணமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்று இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த நோயானது, உலகின் 110 நாடுகளில் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த நோயானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான நாடின் டோரியஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க, அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்குப் பாதிப்பு இருப்பதையடுத்து, அவர் அவருடைய சொந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும், அவரிடம் எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தில், மேற்கொண்டு இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு, முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளிலேயே, அதிகளவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, இத்தாலி நாடு தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு, இந்த வைரஸ் காரணமாக, அந்நாட்டின், வடக்குப் பகுதியானது சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஒன்றரை கோடி பேரினை, அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. அந்நாட்டிற்கான விமான சேவையினை, பல நாடுகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. அமெரிக்காவில் 50 பேர் தற்பொழுது வரை, மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவினைப் பொறுத்தமட்டில், சுமார் 50 பேர் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும், எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஈரான் நாட்டிலும், தென் கொரிய நாட்டிலும், இந்த வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பரவுவதன் காரணமாக, ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. வாடிகன் நகருக்குள் பலவிதமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. இத்தாலி உள்ளிட்ட பிற நாடுகளில் நடக்கவிருந்த கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

HOT NEWS