சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் பார்த்து இருக்கீங்களா! அதில் நடிகர்களையும், நடிகைகளையும் மாற்றிவிட்டு, இடம், காலம் மற்றும் பாடல்களை மாற்றி எடுத்தால், அது தான் என்னை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம்.
காக்க காக்க திரைப்படத்தின் திரைக்கதையில், ஒரு யுத்தியைக் கையாண்டு இருப்பார். அதில், தொடக்கத்தில் சூர்யா நீச்சல் குளத்தில் விழுந்து கிடப்பார். அப்பொழுது, கதை பிளாஷ்பேக்காக செல்லும். பின்னர், மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும். மீண்டும் அடுத்தது என்ன என செல்லும். அதே பாணியினை, இப்படத்திலும் பயன்படுத்தி உள்ளார். தனுஷினை நோக்கிப் பாயும் தோட்டாவில் படம் ஆரம்பிக்கின்றது.
அவரை எதற்காக சுடுகின்றனர். அவருக்கும், நாயகி மேகா ஆகாஷிற்கும் என்ன சம்பந்தம், அவருடைய அண்ணன் சசிகுமார் மும்பையில் என்ன செய்கின்றார் என இப்படத்தினை தனக்கே உரித்தான அழகான திரைக்கதை மூலம், படமாக உருவாக்கி இருக்கின்றார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
பொள்ளாச்சியில் பணக்கார குடும்பத்தினைச் சேர்தவர் தனுஷ். ரகு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கும் சென்னையில் வந்து தங்கிப் படிக்கும் லேகாவிற்கும் காதல் மலர்கின்றது. வழக்கம் போல், கௌதம் மேனன் ஸ்டைலில் பாடல்களும் நம்மை வருடுகின்றன. பின்னர், லேகா மிக அழகாக இருப்பதால் அவரை வளர்த்த குபேரன், லேகாவினை நடிகையாக்கி பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றார்.
இதனால், லேகாவினை மும்பைக்கு அழைத்துச் செல்கின்றார். நான்கு வருடங்கள் ஆகின்றது. தனுஷுடன் ஒரு தொடர்பும் இல்லை. திடீரென்று, ஒரு போன் வருகின்றது. அந்த போனில் இருப்பது, லேகா. உங்கள் அண்ணன் ஆபத்தில் இருக்கிறார் எனக் கூறுகின்றார். தனுஷ் என்ன செய்தார், அண்ணனைக் காப்பாற்றினாரா, காதல் என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை.
நான்கு வருடங்களாக, அந்தப் பெண் என்ன செய்தார், தனுஷ் காதல் அப்படியே இருப்பதும் ஆச்சர்யம் கலந்த கேள்விக்குறியாக உள்ளது. படத்தின் பல இடங்களில் லாஜிக்கும் இடிக்கின்றன. சசிகுமார் நடிப்பு முதல் மற்ற நடிகர்களின் நடிப்பும் எதார்த்தமாக இருக்கின்றன. இருப்பினும், அச்சம் என்பது மடமையடா படமே நம் கண் முன் வந்து நிற்கின்றன. இந்தப் படத்துக்காடா இவ்வளவு பில்டப் என, யோசிக்க வைத்தாலும் படத்தின் பாடல்கள் நம் மனதினை தேற்றுகின்றன.
எது எப்படியோ, இப்படம் வெளியாகி விட்டது. அதுவும் பார்ப்பதற்கு ரொம்ப பிரஸ்ஸாகவே இருக்கின்றது. மொத்தத்தில் அச்சம் என்பது மடமையடா, ஏனோ வானிலை மாறுதே.