ஏலியன்களைத் தேடிக் கொண்டு இருக்கும் மனிதனின் தேடுதல் தான் நீள்கின்றதே தவிர, ஏலியன்களை காண இயலவில்லை, அல்லது அதனைப் பற்றியத் தகவல்களை வெளிப்படையாகக் கூறவில்லை. இந்த சூழ்நிலையில், புதிய மாற்றம் ஒன்றினை வெள்ளிக் கிரகத்தில், விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
பாஸ்பீன் எனும் வாயுவினைத் தற்பொழுது, வெள்ளிக் கிரகத்தின் காற்றிலும், வளிமண்டலத்திலும் கண்டுபிடித்து உள்ளனர் விஞ்ஞானிகள். இந்த பாஸ்பீன் என்பது பாஸ்பரஸ் அணுவுடன் மூன்று ஹைட்ரஜன் அணுக்களும் இணைவதால் உருவாகும் அமைப்பாகும். இது மனிதர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. இந்த வாயுவினை ஹவாய் தீவில் உள்ள ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் தொலைநோக்கியனைக் கொண்டு கண்டறிந்து உள்ளனர்.
இது குறித்து, கார்டிஃப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஜேன் க்ரீவிஸ் கூறுகையில், நான் இந்த வளிமண்டல மாற்றத்தினைக் கண்டு வியப்படைகின்றேன். இந்த மாற்றங்கள் இங்கு உயிரினங்கள் இருப்பதற்கு காரணமாகக் கூட இருக்கலாம். மஸ்ஸாசஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக் கழகத்தின் வானியல் ஆய்வாளரான கிளாரா சௌசா சில்வா பேசுகையில், அங்கிருப்பது பாஸ்பீன் என்றால், அங்கு உயிர்கள் வாழ்வது சாத்தியமாக இருக்கும் என்றால், இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும் இல்லை எனத் தெரிவித்து உள்ளார்.
பூமியினை விட சற்றுச் சிறியதாகவும், சூரியக் குடும்பத்தின் 2வது கிரகமாகவும் இருக்கும் இந்த வெள்ளியில் 471 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நீடிக்கும். அந்த வெப்பநிலையில் மனிதர்களால் வாழ இயலாது. ஒருவேளை அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்தால், கண்டிப்பாக, அந்தக் கிரகத்தில் வேறொரு உடலமைப்பு கொண்ட உயிர்களே வாழ இயலும் என்றுக் கூறப்படுகின்றது.