விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், டெல்லிக்குள் நுழைவதற்கு போலீசார் தற்பொழுது அனுமதி வழங்கி உள்ளனர்.
புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கடந்த 26ம் தேதி அன்று பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல், ஹரியானா போலீசார் தடுத்தனர். இருப்பினும், லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால், வேறு வழியின்றி அவர்களை அனுமதித்தனர்.
இந்த சூழலில், தற்பொழுது அந்த விவசாயிகள் டெல்லியின் நுழைவு வாயிலில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை கலைக்கும் பொருட்டு, போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடுப்புகளை அமைத்தும் தடுத்து வந்தனர். இருப்பினும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றக் காரணத்தால், வேறு வழியின்றி நிபந்தனைகளுடன் அவர்களை அனுமதித்து உள்ளனர்.
அதன்படி, டெல்லிக்குள் செல்கின்ற விவசாயிகள் எவ்வித கலவரத்தினையும் தூண்டாத வண்ணம் போராட்டம் நடத்திக் கொள்ளலாம். இவர்களுடன் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இணைந்து உள்ளனர். வருகின்ற 3ம் தேதி அன்று விவசாயத்துறை அமைச்சர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.