கடும் குளிரானது டெல்லியினை வாட்டி வருகின்ற நிலையில், தொடர்ந்து 40 நாட்களைக் கடந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, இந்திய விவசாயிகள் பல லட்சம் பேர் ஒன்றாக திரண்டு, டெல்லியின் நுழைவு வாயிலில் போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று, தங்களுடையக் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். 9 முறைக்கும் மேலாக, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகளும் தங்களுடையப் போராட்டத்தினை விட்டுக் கொடுப்பதாக இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல ஆயிரம் விவசாயிகள், டெல்லியினை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், புதியதாக அவர்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் தற்பொழுது 5 டிகிரி செல்சியஸிற்கும் கீழாக, வெப்பநிலை உள்ளது. இதனால், அங்கு கடும் குளிரானது நிலவி வருகின்றது. அங்குப் போராடுபவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குளிரால் உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, அங்கு தற்பொழுது புதிய முயற்சியினை விவசாயிகள் செய்துள்ளனர். அங்கு கண்டெய்னர்களை எல்லாம் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்குமிடங்களாக மாற்றி வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கும், உண்பதற்கும், உணவு சமைப்பதற்கும் நெருப்பு மூட்டி வருகின்றனர். அதனால், எளிதாக குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, மத்திய அரசு அவர்களுடையக் கோரிக்கைகளை கேட்காதப் பட்சத்தில், வருகின்ற குடியரசுத் தினத்தன்று முப்படைகளின் அணிவகுப்பிற்குப் போட்டியாக, டெல்லிக்குள் நுழைந்து டிராக்டர் பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.