ஒரு அதிரடியான, தடாலடியான, மிரட்டலான படம் பார்க்கத் தயாராக இருப்பவர்கள் அல்லது விரும்புபவர்கள், இந்தப் படத்தை மிஸ் பண்ணாதீங்க! அப்படியொரு படம் தான் இந்த ஹாப்ஸ் அன்ட் ஷா திரைப்படம். பார்ஸ்ட் அன்ட் ப்யூரியஸ் பட வரிசையில் ஒன்பதாவது பாகமாக வெளி வந்திருக்கும் இத்திரைப்படம், உலகளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் (எப்&எப்) படங்கள் என்றாலே, வின் டீசல் மற்றும் அவருடைய குழுவினர் இருப்பர். இப்படத்தில் அவர்கள் இல்லாமல் படத்தை உருவாக்கி உள்ளனர். எப்&எப் படங்களில், கார்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும். வெடி குண்டுகள் வெடிக்கும். அசத்தலான பஞ்ச்கள் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில், பஞ்ச்களும், வெடி குண்டுகளுமே உள்ளன. காற்றைக் கிழிக்கும் கார்கள் இல்லை.
டபில்எப் புகழ் ராக்கும், ஜேசன் ஸ்டேத்தமும் இணைந்து கலக்கியுள்ள திரைப்படம் தான் இந்த ஹாப்ஸ் அன்ட் ஷா திரைப்படம். ஷாவின் தங்கை வில்லன்களிடம் இருந்து, உலகை அழிக்கும் வைரஸை எடுத்து ஓடுகிறார். அவரை வில்லன் துரத்துகிறார். உலகைக் காப்பாற்ற ஹாப்ஸ் மற்றும் ஷா இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என எம்ஐ6 நிறுவனம் கூறுகிறது. அவர்கள் பேச்சை வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டு இருவரும் இணைந்து உலகைக் காக்க முயல்கின்றனர். அப்பொழுது தான் தெரிகிறது, அவர்கள் மோதுவது ஒரு சூப்பர் வில்லன் என்று.
அவன் அடிக்கிறான், மிதிக்கிறான், ஓடுகிறான் அசத்தலாக பஞ்ச் டயாலக்குகளும் பேசுகிறான். அவனை இவர்களால் சமாளிக்க முடியவில்லை. ஏனெனில் அவன் ஒரு சைபோர்க். அவனிடம் இருந்து தன்னுடைய தங்கையை காப்பாற்றினாரா ஷா, ராக் வில்லனை வீழ்த்தினாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை. படத்தில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. என்ன தெரியுமா? இந்தப் படத்தில் டபில்யூடபில்யூஎப் நிகழ்ச்சியில் உள்ள ரோமன் ரெய்ன்ஸ் நடித்துள்ளார். அவர் ராக்கின் குடும்பத்தினராக நடித்துள்ளார்.
படம் முழுக்க, தீப்பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள், அசத்தலான திரைக்கதை, தெறிக்கவிடும் பஞ்ச்கள் என, ஒரு படம் வெற்றிப் பெற என்னவெல்லாம் வேண்டுமோ, அவை எல்லாம் இந்தப் படத்தில் உள்ளன. ஒரே ஒரு குறை தான். அந்த வின் டீசல் குடும்பமும் இதில் இருந்திருந்தால், எப்&எப் படத்தின் சாராம்சம் முழுமைப் பெற்று இருக்கும்.