கப்பலில் இருந்த தீ கட்டுப்படுத்தப்பட்டது! இந்திய கடற்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

07 September 2020 அரசியல்
shipfirerescued.jpg

இலங்கைக்கு அருகில் இருந்த கப்பலில் ஏற்பட்டத் தீ, மூன்று நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

கடந்த வாரம், குவைத் நாட்டில் இருந்து இந்தியாவின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றினை ஏற்றிக் கொண்டு, பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் என்றக் கப்பலானது, இலங்கை வந்திருந்தது. அங்குள்ள அம்பாரா மாவட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் உள்ள கொதிகலன் வெடித்துச் சிதறியது. இதனால், அந்தக் கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடி விபத்தால், கப்பலில் மளமளவென தீப்பற்றியது.

இதன் காரணமாக, அந்தக் கப்பலில் வேலை செய்த 22 ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். அந்தக் கப்பலில் பிடித்த தீயினை அணைக்கும் முயற்சியில், இலங்கைக் கடற்படை ஈடுபட்டது. இருப்பினும், அதனால் அணைக்க முடியாதக் காரணத்தால், இந்தியாவின் உதவியினை நாடியது. இதனையொட்டி, ஒரு கடற்படைக் கப்பல், ஒரு டோர்னியர் விமானம், ஐந்து இந்திய கப்பல்கள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன.

அந்தக் கப்பல்கள் தீயணைக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டன. மேலும், சிங்கப்பூர், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல நிபுணர்கள் இந்தக் கப்பலில் பிடித்தத் தீயினை அணைக்கும் முயற்சியில் கலந்து கொண்டனர். அவர்களை, அந்தக் கப்பலின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கப்பலில் இருந்த தீயானது, தொடர்ந்து 79 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக, தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த தீயானது, மேலும் பரவாமல் இருப்பதற்கு, அந்தக் கப்பலானது, தொடர்ந்து குளிர்விக்கப்படுகின்றது. இந்த செயலால், கப்பலின் சூடானது குறையும் என்றுக் கூறப்படுகின்றது. வெடி விபத்து ஏற்பட்ட கொதிகலன் அறையானது, கப்பலின் அடிப்பாகத்தில் உள்ளதால், அதனை கண்காணிக்கும் பணி மிகவும் சவாலான விஷயம் ஆகும். அந்தக் கப்பலில் இருந்த ஊழியர்கள், தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு பேசினர். இந்த சம்பவத்தால், பெரும் அசம்பாவிதமானது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தவிர்க்கப்பட்டு உள்ளது.

HOT NEWS