இந்திய அளவில் பெரிய பேசும் பொருளாக இருந்தது தான், இந்த ரஃபேல் விமானம். இதனை வைத்து, எதிர்கட்சிகள் மோடியின் தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடியது.
நேற்று இந்திய விமானப் படைத் தினத்தினை முன்னிட்டு, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், முதல் ரஃபேல் விமானத்தினை நாட்டிற்கு அர்பணித்தார்.
நேற்று இந்திய விமானப் படையின் 87வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, பிரான்ஸிடம் இருந்து, முதல் ரஃபேல் விமானத்தினை இந்திய விமானப்படை பெற்றது. அதனை ராஜ்நாத் சிங், பூஜைகள் செய்து பின் நாட்டிற்கு அர்பணித்தார்.
மொத்தம் 36 விமானங்கள் வரும் 2022ம் ஆண்டுக்குள், இந்தியாவிற்கு வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ரஃபேல் விமானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது போர்க் கப்பலிலும் இறங்கும், அதே சமயம் விமான தளத்திலும் இறங்கும். இந்த விமானம் முழுமையாக போர் மற்றும் முழுமையானத் தாக்குதலுக்காக உருவாக்கப்பட்டது. மேலும், அணு ஆயுதங்களை வானில் பறந்த படி, வீசுவதற்கும் இந்த விமானம் மிக அதிகமாகப் பயன்படக் கூடியது.
2016ம் ஆண்டு, 56,000 கோடி ரூபாய் மதிப்பில், மோடி தலைமையிலான அரசாங்கம், ரஃபேல் ஒப்பந்தத்தினை செய்தது. 2020ம் ஆண்டுக்குள் மொத்தமுள்ள 36 விமானங்களில், 4 விமானங்கள் மே மாதத்திற்குள் இந்தியாவிற்கு வரும். மீதமுள்ள அனைத்தும், சேர்த்து 2022ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும், இந்தியாவிற்கு வந்துவிடும்.
இந்த வகை விமானங்கள், 2004ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கடற்படையிலும், 2006ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின், விமானப் பாதுகாப்புப் படையிலும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.